![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/MixCollage-07-Feb-2025-08-03-PM-2267.jpg)
கோலாலம்பூர், பிப் 7 – முஸ்லீம் அல்லாதவர்களின் விழாக்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் முஸ்லீம் அல்லாதவர்களின் வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முஸ்லீம்கள் பங்கேற்பதற்காக அவர்கள் அனுமதிப் பெறவேண்டும் என்று முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்க அமைச்சரவை ரத்து செய்திருப்பதை மலேசிய இந்து சங்கம் வரவேற்றுள்ளது.
இன்று காலையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டதோடு இறுதியில் இந்த பரிந்துரைகளை அமைச்சரவை ரத்துச் செய்தது குறித்து பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக மலேசிய இந்துச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கு முன் இந்த வழிகாட்டுதல்கள் குறித்து மலேசிய இந்து சங்கம் கடுமையான ஆட்சேபனையை தெரிவித்திருந்ததோடு அது தொடர்பான கவலையையும் தெரிவித்திருந்தது.
மலேசியாவில் நீண்டகாலமாக நிலவும் சர்வ சமயங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு சாத்தியமான இடையூறுகள் உட்பட பல்வேறு விவகாரங்களை தீவிரமாக பரிசீலிக்கப்பட்ட பின் அமைச்சரவை ஆக்கப்பூர்வமான முடிவை எடுத்துள்ளது.
பிரதமரும் அமைச்சரவையும் எடுத்துள்ள முடிவு நாட்டில் பல்வேறு சமயங்களைக் கொண்ட அமைதி மற்றும் ஐக்கியத்தை பாதுகாக்கும் நிலையை பிரதிபலிப்பதாக இந்து சங்கம் தெரிவித்துள்ளது.