
கோலாலம்பூர், மார்ச்-9 – பினாங்கு முதல் அமைச்சராக இருந்த காலத்தில் ஒரு குட்டி ‘தெய்வமாக’ கொடி கட்டிப் பறந்த லிம் குவான் எங்கின் பிடி, DAP-யில் ஆட்டம் கண்டுள்ளது.
மார்ச் 16-ல் நடக்கும் DAP மத்திய செயலவைத் தேர்தலில், நடப்புத் தலைமைத்துவம் குவான் எங்கை ஓரங்கட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குவாங் எங் மீண்டும் தேசியத் தலைவராவதைத் தடுத்து, புதியவரை அப்பதவிக்குக் கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக கட்சி வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
கட்சித் தலைமைத்துவப் பதவிகளில் தனது சகோதரி லிம் ஹுய் யிங்கை (Lim Hui Ying) கொண்டு வந்து, லிம் குடும்ப அரசியல் வம்சத்தை வளர்க்கப் பார்க்கிறார் என குவான் எங் மீதும் குற்றச்சாட்டு பரவியுள்ளது.
எனினும், கட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கும் சில முக்கியப் புள்ளிகளால், உள்நோக்கத்தோடு பரப்பப்படும் குற்றச்சாட்டே அதுவென லிம் தரப்பு கூறுகிறது.
இளையத் தலைவர்களை ஊக்குவிக்கிறோம் என்ற போர்வையில் உண்மையில் அது DAP கட்சியில் தற்போது வெடித்துள்ள அதிகாரப் போராட்டத்தை மறைக்கும் செயலாகும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சும் நிலவுகிறது.
30 மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் 70 பேர் இம்முறை போட்டியிடுகின்றனர்.
உதவித் தலைவர் எம்.குலசேகரன் உள்ளிட்ட சில மூத்தத் தலைவர்கள், இளம் தலைவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கிக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து, DAP-யின் எதிர்கால திசையை வடிவமைக்கும் சக்தி, புதியத் தலைமுறை தலைவர்களாக உருவெடுத்துள்ள அந்தோணி லோக் மற்றும் ஙா கோர் மிங்கின் கைகளுக்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
கட்சியில் மிகவும் சக்திவாய்ந்த பொதுச் செயலாளர் பதவியில் உள்ள அந்தோணி லோக், போக்குவரத்து அமைச்சராக அரசாங்கத்திலும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறார்.
உதவித் தலைவராக உள்ள ஙா கோர் மிங், வீடமைப்பு-ஊராட்சித் துறை அமைச்சராக வலம் வருகிறார்.
மலாய்க்காரர்கள் மத்தியில் மதிப்பு கொண்ட நடைமுறைத் தலைவராக அந்தோணி லோக், வலுவான அடிமட்ட ஆதரவைக் கொண்ட ஙா கோர் மிங் இருவரின் கூட்டணி தான் DAP-யை இனி வழிநடத்திச் செல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் குரலாக நீண்ட காலமாகக் கருதப்படும் DAP-க்கு, இத்தேர்தல் தலைமைத்துவத்தைப் பற்றியது மட்டுமல்ல – அதன் எதிர்கால நிலைத்தன்மையைப் பற்றியது.
இது, புதிய இரத்தத்தைப் பாய்ச்சி கட்சியைப் புதுப்பிக்கும் நடவடிக்கையா அல்லது கட்சிக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை ஒதுக்கி, ஒரு புதிய அதிகார மையத்தை அமைக்கும் முயற்சியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.