
கோலாலம்பூர், ஜூலை 4 – கடந்த செவ்வாய்க்கிழமையன்று லோட்டஸ் அம்பாங் அருகேயுள்ள மிடில் ரிங் சாலை 2 இல் (MRR2) இரண்டு கார்களுக்கிடையே விபத்தை ஏற்படுத்திய டெலிவரி ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று அம்பாங்க் ஜெயா காவல்துறைத் தலைவர் முகமட் அசாம் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்
இந்த சம்பவம், அங்கிருந்த வாகன டேஷ்கேம் ஒன்றில் பதிவாகி பின்னர் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நடுப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் எந்தவித அறிகுறிகளுமில்லாமல் திடீரென இடதுப்புற பாதையில் நுழைந்ததால் ஹோண்டா சிவிக் வாகனமும் பெரோடுவா அடிவா வாகனமும் ஒன்றையொன்று மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டதென்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் இரு வாகனங்களுக்குமே சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அறியப்படுகின்றது.
இந்தக் குற்றம் சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதோடு பொதுமக்கள் சாலையில் பொறுப்புணர்வுமிக்க ஓட்டுனர்களாக இருக்கவேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.