
மூவார் , அக் 13 –
இந்த மாத தொடக்கத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் குழுவினரிடமிருந்து 18,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான பணம், தங்க நகைகள் மற்றும் கைதொலைபேசிகளை கொள்ளையடித்ததாக வர்த்தகர் ஒருவர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி முகமட் கைரி ஹருன் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட 38 வயதுடையை அந்த ஆடவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்தார்.
குற்றஞ்சாட்டப்பட்ட நபரும் அவருடன் அந்த கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இதர சிலரும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் வீட்டிற்கு சென்று ஐந்து மியன்மார் பிரஜைகளிடம் கொள்ளையிட்டதாக நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டது .
அவர்கள் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதிக்கு சென்று 10 தொலைபேசிகள் , மடிக்கணினி மற்றும் கையடக்க கணினி போன்ற விலையூர்ந்த பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றனர்.
அந்த கொள்ளையின்போது பாதிக்கப்பட்ட தொழிலாளர் ஒருவர் கைவிலங்கிடப்பட்டு அறையப்பட்டதோடு இதர இரண்டு மியன்மார் பெண் தொழிலாளர்கள் பிணையாக பிடிக்கப்பட்டு அவர்களை விடுவிப்பதற்கு 50,000 ரிங்கிட் பிணைப்பணம் கேட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அக்டோபர் 3 ஆம் தேதி வெளிநாட்டைச் சேர்ந்த மூவருடன் சேர்ந்து அந்த வர்த்தகர் Sinar Bakti யிலுள்ள உணவு விற்பனை செய்யும் இடத்தில் அதிகாலை ஒரு மணியளவில் இக்குற்றத்தை புரிந்துள்ளார்.
குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள்வரை சிறை மற்றும் பிரம்படி விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 395ஆவது விதியின் கீழ் அந்த வர்த்தகர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த நபருக்கு 10,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது



