
கோலாலம்பூர், டிசம்பர் 23-தலைநகர் ஸ்தாப்பாக்கில் அவசர சேவைக்குச் சென்றிருந்த ஒரு அம்புலன்ஸ் வண்டி, சாலை சமிக்கை விளக்குப் பகுதியில் நின்றிருந்த காரை மோதி கட்டுப்பாட்டை இழந்து, பல மோட்டார் சைக்கிள்களை மோதியது.
இவ்விபத்து நேற்று காலை 8.10 மணியளவில் ஜாலான் உசாஹவான் 6 (Jalan Usahawan 6) சாலையில் நடந்தது.
மலேசிய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு சொந்தமான அந்த அம்புலன்ஸ் வண்டி, சைரன் ஒலி மற்றும் விளக்குகளை எரியவிட்டு தான் சென்றது…
ஆனால், சாலைச் சந்திப்பில் சிவப்பு விளக்கை அது மீறியதாக போலீஸ் கூறியது.
அதனால் ஒரு காரை மோதி, பின்னர் அருகில் நின்றிருந்த 4 மோட்டார் சைக்கிள்களையும் மற்றொரு காரையும் அது மோதியது.
40 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் வலது தொடை எலும்பு முறிவுக்கு ஆளானார்.
மேலும் 7 ஆடவர்கள், ஒரு பெண் மற்றும் 9 வயது சிறுமி உட்பட பலர் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர்.
அனைவரும் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
அவசர சேவைகளுக்குச் சென்றாலும், அம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சாலை சமிக்ஞை சந்திப்புகளில் வேகத்தை குறைக்க வேண்டும் என போலீஸ் வலியுறுத்தியது.
கவனக்குறைவாக வாகனமோட்டியதன் பேரில் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.



