ஹோங் கோங், அக்டோபர்-24 – ஹோங் கோங்கில் முதன் முறையாக டைனோசர் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஹோங் கோங்கின் உட்புறப் பகுதியில் அமைந்துள்ள வடகிழக்கு துறைமுக தீவின் வண்டல் பாறைகளில், கடந்த மார்ச் மாதம் முதன் முறையாக முதுகெலும்பு படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இந்த டைனோசர் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சுமார் 145 மில்லியன் முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த பெரிய வகை டைனோசருக்குச் சொந்தமான படிமங்களாக அவை இருக்கலாம் என, ஹோங் கோங் மற்றும் சீன பெருநில அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.
எனினும் அவை எந்த இனத்தைச் சேர்ந்தவை என்பதும் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.
அதற்காக, மேற்கொண்டு ஆராய்ச்சிப் பணிகள் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த டைனோசர் படிமங்கள் வெள்ளிக்கிழமை முதல் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.