
புத்ராஜெயா, ஜூலை-15- மலேசியர்களுக்கு விரைவிலேயே நன்றி பாராட்டும் வகையில் ஓர் அசாதாரண அறிவிப்பை வெளியிடப் போவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சூசகமாக தெரிவித்துள்ளார்.
அதனை விரிவாகக் கூறவில்லை என்றாலும், அன்வார் தனது ஃபேஸ்புக் வழியாகப் பகிர்ந்த ‘AKAN DATANG’ என்ற வாசகம் பொறித்த போஸ்டர், வலைத்தளவாசிகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.
“மலேசியர்களுக்கு ஓர் அசாதாரண நன்றி பாராட்டு… எனது மலேசியாவுடன்…” என அந்த போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது.
“காத்திருங்கள்…” என்ற இரத்தினச் சுருக்கமான வார்த்தையுடன் அதனை அவர் பதிவேற்றியுள்ளார்.
தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் உள்ளிட்ட அமைச்சர்களும் அதே பதிவைத் தத்தம் சமூக ஊடகங்களில் பதிவேற்றியிருப்பதால், அந்த அறிவிப்பு என்னவாக இருக்குமென மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
தேசிய தினம் கொண்டாட்டம் விரைவில் வருவதால், மக்களுக்கு ஏதும் சலுகைகள் அறிவிக்கப்படுமோ எனவும் வலைத்தளங்களில் யூகங்கள் கிளம்பியுள்ளன.