
கோலாலம்பூர், ஜன 23 – அடுக்ககத்தில் நாய் வளர்ப்பதற்கு தடை விதித்துள்ள சிலாங்கூர் அரசாங்கம் மற்றும் பெட்டாலிங் மாநகர் மன்றமான (MBPJ ) வுக்கு எதிராக ஒலிம்பிக் உட்பட பல்வேறு அனைத்துலக போட்டிகளில் மலேசியாவை பிரதிநிதித்து கலந்துகொண்ட முன்னாள் ஓட்டப்பந்த வீராங்கனை நோராசிலா காலிட் ( Noraseela Khalid ) வழக்கு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் நாய் உரிமம் மற்றும் நாய் கூண்டு தொடர்பான 2007 ஆம் ஆண்டின் ) துணைச் சட்டம், 1976 ம் ஆண்டின் ஊராட்சி மன்றங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாக சட்டம் உட்பட கூட்டரசு சட்டத்திற்கு முரணாக இருப்பதாக நோராசிலா தனது வழக்கு மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெட்டாலிங் மாநகர் மன்றத்தின் துணைச் சட்டத்தின் பிரிவு 8 (2) MPPJ மாநகர் மன்ற பகுதியிலுள்ள அடுக்ககங்களில் குடியிருப்புவாசிகள் நாய் வளர்ப்பதை தடைவிதிக்கிறது.
ஒட்டுமொத்தமான இந்த தடையை அமல்படுத்தும் அதிகாரம் எம்.பி.பி.ஜேவுக்கு இல்லையென பெட்டாலிங் ஜெயாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்துவரும் நோராசிலா தெரிவித்தார்.
நாய்கள் அல்லது பிற செல்லப்பிராணிகள் அண்டை வீட்டாரை தொந்தரவு செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாததால், செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் சொத்துக்களை முழுமையாகப் பயன்படுத்தி அனுபவிக்கும் உரிமையை இந்தத் தடை மீறுகிறது என அவர் தெரிவித்தார்.
இந்த துணைச் சட்டம் செல்லாது மற்றும் செயல்படுத்த முடியாதது என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டுமென 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் மலேசியாவை பிரிதிநிதித்து கலந்துகொண்ட நோராசிலா கோரியுள்ளார்.



