அதிகரிக்கும் பதற்றம்; தென் கொரியாவை இணைக்கும் சாலைகளையும் இரயில் பாதைகளையும் துண்டித்த வட கொரியா
சியோல், அக்டோபர்-9 – தென் கொரியாவுடன் இணைக்கப்பட்ட அனைத்து சாலைகளையும் இரயில் பாதைகளையும் முற்றிலுமாக துண்டித்து, தனது எல்லைப் பகுதியை பலப்படுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது.
தென் கொரியாவில் நடத்தப்பட்ட போர்ப் பயிற்சிகளுக்கும், அவ்வட்டாரத்தில் அமெரிக்க அணுசக்தி தளவாடங்கள் அடிக்கடி காணப்படுவதற்கும் பதிலடியாக அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வட கொரிய இராணுவம் வெளியிட்ட அறிக்கை கூறியது.
அதோடு, தென் கொரியாவை தனது முக்கிய விரோதி நாடு என்றும், மாறாத பிரதான எதிரி என்றும் கடும் தோரணையில் வட கொரியா வருணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வறிவிப்பானது, இவ்வாண்டுக்கு முன்பு வரை, அண்மைய காலங்களில் இல்லாத அளவுக்கு இரு கொரியாக்களையும் பிரிக்கும் எல்லைக் கோட்டில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
வட கொரியா ஏற்கனவே, இராணுவமயமாக்கப்பட்ட எல்லைப் பகுதியில் தரிசு நிலங்களை உருவாக்கி, கண்ணிவெடிகளையும் தடுப்புகளையும் நிறுவியது.
இதனால் பல விபத்துகள் ஏற்பட்டும் அதனை அது கண்டுகொள்ளவில்லை என, தென் கொரியா கடந்த ஜூலையிலேயே குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கொரிய தீபகற்பம் வட கொரியா, தென் கொரியா என இரண்டாக உடைந்ததில் இருந்து இரு நாடுகளுக்கியிடையில் பதட்டம் நீடித்து வருகிறது.