
நியூ டெல்லி, டிசம்பர் 24 – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO இன்று இந்தியாவின் விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்திய மண்ணிலிருந்து இதுவரை ஏவப்பட்டதில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பி உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட அந்த செயற்கைக்கோள், சுமார் 6,100 கிலோ எடை கொண்ட அமெரிக்க நிறுவனமான AST SpaceMobile-ன் செயற்கைக்கோளை பூமிக்கு அருகிலுள்ள வட்டப்பாதையில் (Low Earth Orbit) நிலைநிறுத்தியுள்ளது.
ISRO அறிவிப்பின்படி, இது இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட மிக கனமான payload என்று கூறியுள்ளது. இந்த ஏவுதல், பெரிய மற்றும் கனமான செயற்கைக்கோள்களை ஏவுவதில் இந்தியாவின் தொழில்நுட்ப திறன் உயர்ந்ததை காட்டுகிறது.
இந்த சாதனை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, இது இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல் என பாராட்டினார். மேலும், உலகளாவிய வணிக செயற்கைக்கோள் சந்தையில் இந்தியாவின் இடத்தை இது வலுப்படுத்தும் என்றும் கூறினார்.
எதிர்காலத்தில், இந்தியா 2027ல் மனித விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவும், 2040க்குள் நிலவுக்கு இந்திய விண்வெளி வீரரை அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



