கோப்பன்ஹேகன், அக்டோபர்-11 – வியர்வை வெளியேறாமலேயே உடற்பயிற்சி செய்வதன் பலன்களை வழங்கும் புதிய மருந்தை டென்மார்க் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகளை நகலெடுக்கும் மாத்திரியை உருவாக்கி, அவற்றை எலிகளிடமும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அம்மாத்திரை, உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றி இதயத்தைப் பலப்படுத்துகிறது.
அதிவேகத்தில் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடுவதால் ஒருவருக்குக் கிடைக்கும் மருத்துவப் பலன்களுக்கு ஈடான நன்மைகளை, அப்புதிய மாத்திரைகள் வழங்குவது சோதனையில் கண்டறியப்பட்டது.
உடலைக் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள, எல்லோராலும் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடவோ, கடுமையான உணவுக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவோ முடியாது.
பலருக்கு உடல் ஒத்துழைப்பதில்லை.
எனவே, அத்தகையோருக்கு இப்புதியக் கண்டுபிடிப்பு பெரும் உதவியாக இருக்குமென ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
எலிகள் மீதான சோதனை வெற்றியளித்திருப்பதால், விரைவில் மனிதர்கள் மீதான சோதனை தொடங்குகிறது.
அதன் பிறகான மதிப்பீட்டைப் பொருத்தே அம்மாத்திரை சந்தைக்கு வருமா இல்லையா என்பது முடிவாகும்.
ஆனால் அதற்கு காலம் பிடிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஒருவேளை மனிதர்கள் பயன்படுத்த பாதுகாப்பானதே என அம்மாத்திரைகள் உறுதிச் செய்யப்பட்டால், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கடுமையான நோய்களிலிருந்து மீண்டு வருபவர்கள் உள்ளிட்டோருக்கு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுமென்பது திண்ணம்.