நியூ யோர்க், நவம்பர்-8 – கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி அமெரிக்க அதிபர் தேர்தலில் அமோக வெற்றிப் பெற்றுள்ள டோனல்ட் ட்ரம்ப், அதனை குடும்பத்தோடு கொண்டாடிய நிகழ்வில் தெஸ்லா நிறுவனர் இலோன் மாஸ்க்கும் பங்கேற்ற புகைப்படங்கள் வைரவாகியுள்ளன.
The Whole Squad என்ற வாசகத்தோடு ட்டிரம்பின் பேத்தி X தளத்தில் பகிர்ந்துள்ள அப்படத்தில், இலோன் மாஸ்க் தனது 4 வயது மகனைக் கையில் ஏந்தியவாறு நிற்கிறார்.
ஆனால், டிரம்பின் மனைவி மெலானியாவை அதில் காணவில்லை.
அப்பதிவைப் பார்த்த வலைத்தளவாசி ஒருவர், ‘இலோன் மாஸ்க் தற்போது ட்ரம்ப் குடும்பத்தில் ஓர் அங்கம்’ என கருத்து பதிவேற்றியுள்ளார்.
தேர்தலில் டிரம்ப்புக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து X தளத்திலும் மேடைகளிலும் இலோன் மாஸ்க் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸைத் டிரம்ப் தோற்கடித்த இரவு ஃபுளோரிடாவில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்திலும் இலோன் மாஸ்க் முக்கியப் பங்கு வகித்தார்.
ட்ரம்பின் வலது கரமாகவே மாறியுள்ள அந்த உலகக் கோடீஸ்வரருக்கு, ட்ரம்பின் புதிய நான்காண்டு கால ஆட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.