
கோலாலம்பூர், டிச 3 – UPNM எனப்படும் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் பகடிவதை கொடுமைப்படுத்தப்படும் கலாச்சாரம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அதன் உயர் அதிகாரிகளின் தலைகள் உருளும் என மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.
இந்த ஆரோக்கியமற்ற நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வரவும், பல்கலைக்கழகத்தின் நல்ல பெயரை மீட்டெடுக்கவும் அனைத்து தரப்பினரும் உழைக்க வேண்டும் என்று இன்று UPNM பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில் முதல் முறையாக உரையாற்றியபோது சுல்தான் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.
பகடிவதை சம்பவங்கள் தொடர்ந்தால், எனது பெயரை இந்த பல்கலைக்கழகத்துடன் இணைக்க விரும்பவில்லை. தளபதிகள் மற்றும் தலைவர்களும் பொறுப்பேற்று தங்கள் கடமைகளில் தவறியதற்காக பதவி விலக வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ராணுவ அதிகாரிகளாக ஆக்குவதற்கு இங்கு அனுப்புகிறார்கள், எனவே அவர்கள் கொடுமைப்படுத்துதலுக்கு ஆளாகக்கூடாது என்று பேரரசர் கேட்டுக் கொண்டார்.