
மணிலா, அக்டோபர்-31 –
ஜோகூர், செகாமாட்டிலிருந்து உலக மேடையைக் கவர்ந்தவர் தான் Dr ரேஷ்மா பிரகாஷ்… (Dr Reshma Prakash)
2024-ல் நடைபெற்ற Mrs. India Worldwide போட்டியில், Water Element Winner, Asia Winner, Elegant Winner என 3 பட்டங்களையும் வென்று பெருமை சேர்த்தவர்.
அதன் தொடர்ச்சியாக, பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற Mrs. Universe 2025 போட்டியிலும் ரேஷ்மா மிளிர்ந்துள்ளார்.
118 நாடுகளைச் சேர்ந்த 120 போட்டியாளர்கள் பங்கேற்ற போட்டியில், அவர் மூன்றாவது இடத்தைப் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தியதோடு Mrs. Universe Tourism 2025 பட்டத்தையும் வென்றார்.
அந்த மகிழ்ச்சியோடு மகிழ்ச்சியாக வணக்கம் மலேசியா அவரை தொடர்புகொண்ட போது, தொடர் வெற்றி குறித்து ரேஷ்மா பெருமிதம் தெரிவித்துகொண்டார்.
மருத்துவராக இருந்துகொண்டு எப்படி இந்த அழகிப் போட்டிகளில் ஆர்வம் வந்தது எனக் கேட்டபோது, வழக்கமாகவே தன்னை வசீகரமாக வைத்துக் கொள்வதால் தனக்கு சுலபமாகி விட்டதாக சொன்னார்.
மருத்துவத் தொழில், குடும்பம், பிள்ளைகள் என பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியிலும் போட்டிக்குத் தயாராவதற்கென நேரம் ஒதுக்குவது இவருக்கு பெரும் துணையாக இருக்கிறது.
இவர் பலவற்றை சொந்தமாகவே கற்றுக் கொள்வதும் கூடுதல் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில், Mrs Universe 2025 என்ற பெரிய போட்டியின் சவால்களையும் ரேஷ்மா நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
பெண்கள், தங்களுக்குப் பிடிப்பதை செய்வதில் யாரும் குறுக்கிட முடியாது.
திருமணம் முடிந்த கையோடு எல்லாம் முடிந்து விட்டது என்ற எண்ணத்தை விட்டு, தங்களின் கனவுகளை நோக்கி அவர்கள் பயணப் பட வேண்டும்.
கணவன்மார்களும் மனைவிகளை ‘கட்டிப் போடாமல்’ துணைவியரின் கனவுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்ற மிக முக்கிய செய்தியை இவர் பதிவுச் செய்தார்.
அழகிலும் அறிவிலும், தன்னம்பிக்கையிலும் மிளிரும் ரேஷ்மா, மருத்துவராகவும், தாயாகவும், பெண்களின் நலனுக்காக போராடும் ஒரு சமூக தலைவராகவும் விளங்குகிறார்.
அவரின் சாதனை, நாட்டுக்கு சமூகத்துக்கும் பெண்களுக்கும் பெருமை சேர்த்ததோடு, உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு பெரும் ஊக்கமாகவும் மாறியுள்ளது.



