கோலாலம்பூர், அக்டோபர்-1, இன்றையத் தேதிக்கு அமெரிக்க டாலருக்கு எதிராக உலகிலேயே மிக வலுவாகப் பதிவாகியுள்ள நாணயமாக ரிங்கிட் விளங்குகிறது.
MUFG வங்கியின் மூத்த பொருளாதார ஆலோசகர் Lyoyd Chan அவ்வாறு கூறுகிறார்.
கடந்த 3 மாதங்களில் மட்டும் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு 14.35 விழுக்காடு உயர்ந்துள்ளதாக Bloomberg-கின் தரவுகள் காட்டுகின்றன.
ஜூன் 27 முதல் செப்டம்பர் 27 வரையிலான காலக்கட்டத்தை அது உட்படுத்தியுள்ளது.
ரிங்கிட்டின் இந்த அபரிமித மீட்சியானது, மலேசியப் பொருளாதார வளர்ச்சி மற்றும் அமெரிக்காவில் வட்டி விகித தளர்வால் உந்தப்பட்டதாக Chan கூறினார்.
ஜூலை முதல், மேலும் அதிகமான வட்டி விகிதக் குறைப்பால், இந்த 2024-ன் இரண்டாம் அரையாண்டில் ரிங்கிட்டின் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்திருப்பதாக அவர் சொன்னார்.
இவ்வேளையில், தாய்லாந்தின் Baht நாணயமும் அமெரிக்க டாலருக்கு எதிராக வலுவாகப் பதிவாகி வருகிறது.ரிங்கிட்டுக்கு அடுத்து, 13.79 விழுக்காட்டு மதிப்புயர்வுடன் Baht இரண்டாமிடத்திலும், ஜப்பானின் Yen நாணயம் 13.04 விழுக்காட்டுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இப்படியே நேர்மறையாகப் போனால் ஆண்டிறுதிக்குள் ஐந்தாண்டு கால சாதனையாக ரிங்கிட்டின் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக 4 ரிங்கிட்டாகப் பதிவாகும் சாத்தியமுள்ளது. ஆனால், நவம்பர் மாத அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை Chan மறுக்கவில்லை.