Latestமலேசியா

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்கும் லாரன் சாஞ்சஸுக்கும் வெனிஸில் பிரமாண்ட திருமணம்

வெனிஸ், ஜூன்-29- அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ், பத்திரிகையாளர் லாரன் சாஞ்சஸ் இருவரும், சினிமாக்காரர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்களை வெனிஸுக்கு அழைத்து, தங்களது திருமணத்தை 3 நாள் விழாவாக பிரமாண்டமாக நடத்தியுள்ளனர்.

200 முதல் 250 விருந்தினர்களை உள்ளடக்கிய அவ்விழாவுக்கு 198 மில்லியன் முதல் 236 மில்லியன் ரிங்கிட் வரை செலவாகியுள்ளது.

இத்தாலியின் சுற்றுலா அமைச்சு வெளியிட்ட ஆய்வின் படி, திருமண விழாவின் மொத்த பொருளாதார தாக்கம் €957 மில்லியன் ஆகும்.

இதில் €896 மில்லியன் “ஊடக கவனத்திலிருந்து” உருவான பலனாகும்.

மீதமுள்ளவை நேரடி மற்றும் மறைமுகச் செலவுகளாகும்; அதாவது, €28.4 மில்லியன் ஹோட்டல் மற்றும் இட வசதிகளுக்காகவும், €17.6 மில்லியன் போக்குவரத்து மற்றும் சேவைகளுக்கு செலவாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை, செயின்ட் மார்க் சதுக்கத்திற்கு எதிரே உள்ள சான் ஜோர்ஜியோ தீவில் இருவரும் மோதிரங்களை மாற்றிக் கொண்டனர்.

நிகழ்வில் பிரபல இசைக்கலைஞர் ஆண்ட்ரியா போசெல்லியின் மகன் மாட்டியோ பாடினார்.

நேற்று சனிக்கிழமை முக்கியக் கொண்டாட்டம் அர்ஸனேல் எனப்படும் பழமையான கப்பல் கட்டும் இடத்தில் நடைபெற்றது.

அதில் உலகப் புகழ்பெற்ற லேடி காகா மற்றும் எல்டன் ஜோன் பாடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

திருமணத்திற்கு வந்த பிரபலங்களில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் மகள் இவாங்கா மற்றும் மருமகன் ஜேரெட் குஷ்னர் முதன்மையானவர்கள் ஆவர்.

அவர்களுடன் பில் கேட்ஸ், ஒர்லாண்டோ ப்ளூம், டோம் பிரேடி, ஜோர்டான் மகாராணி, ஓப்ரா வின்ஃப்ரி, கிரிஸ் ஜென்னர், கிம் மற்றும் க்ளோய் கார்டாஷியன்கள் ஆகியோரும் அடங்குவர்.

விருந்தினர்கள் தங்குவதற்காக வெனிஸின் 5 பிரம்மாண்ட ஹோட்டல்கள் முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெசோஸ் மற்றும் சாஞ்சஸ், கிராண்ட் கால்வாய் காட்சிகளைக் காணும் வகையில் அமான் ஹோட்டலில் தங்கி உள்ளனர்.

இங்கு ஓர் இரவு தங்குவதற்கான செலவு குறைந்தது €4,000.திருமணத்தை ஒட்டி பெசோஸ், சாஞ்சஸ் இருவரும் வெனிஸ் நகரின் 3 முக்கிய நிறுவனங்களுக்கு தலா €1 மில்லியன் வீதம், மொத்தம் €3 மில்லியன் நன்கொடை அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!