அலோர் காஜா, செப்டம்பர் -7 – ‘கொடூரம், அறவே மனிதநேயமற்றது’
மலாக்கா, அலோர் காஜாவில் 8 மாத ஆண் குழந்தையின் பரிதாப மரணத்தை விவரிக்கும் வார்த்தைகள் அவை.
குழந்தைப் பராமரிப்பாளரின் கொடூரத்தால், 13 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு கடவுளின் கிருபையால் கிடைத்த குழந்தையை இழந்து பெற்றோர் பரிதவிக்கின்றனர்.
அதுவும் எப்படி? குழந்தையை துணியால் இறுகக் சுற்றி, வாயில் பால் புட்டியை திணித்து, முகத்தை தலகாணியால் அழுத்தி சொல்ல முடியாத அளவுக்கு துன்புறுத்தி குழந்தையைக் கொலைச் செய்துள்ளார்.
குழந்தைப் பராமரிப்பு மையத்திலிருந்த CCTV கேமராவில் பதிவான அக்கொடூர காட்சிகளை தாம் பார்த்ததாக, குழந்தையின் 39 வயது தந்தை Mejar Mohd. Fikry Amri Abdul Halim பெரும் வேதனையில் கூறினார்.
அம்மையத்திற்கு குழந்தையை கடந்த 5 நாட்களாகத்தான் அனுப்பி வருகிறோம்; அதற்குள் இப்படி ஒரு துயரமா என அவர் கேட்டார்.
முன்னதாக, குழந்தை பேச்சு மூச்சின்றி கிடப்பதாக பராமரிப்பாளரிடமிருந்து அழைப்பு வந்து போய் பார்த்த போது, தாய் அதிர்ந்து போனார்.
குழந்தையின் உடல் நீல நிறமாக மாறியிருந்தும், வாயில் இரத்தம் வடிவதையும் கண்டு அவர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து Johor, Endau-வைச் சேர்ந்த 34 வயது குழந்தைப் பராமரிப்பாளர் நேற்று பிற்பகலில் அம்மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கொலைக் குற்ற விசாரணைக்காக அப்பெண் 7 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.