கோலாலம்பூர், டிசம்பர் 30 – கடந்த ஐந்து ஆண்டுகளாக MK Asia Production Entertaiment நிறுவனம் நடத்தி வரும் அழகு ராணி போட்டியில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக அண்மையில் சர்ச்சைகள் எழுந்தன.
இது குறித்து அப்போட்டியில் பங்கேற்ற போட்டியாளர் ஒருவர், போட்டியின் நிர்வாகத்தில் சில முறைகேடுகள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இது சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் அக்குற்றச்சாட்டை மறுத்து, அந்நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி முரளி கண்ணன் விளக்கம் அளித்திருக்கிறார்.
அழகு ராணி போட்டியில் பங்கேற்கும் அனைவருடனும் முறையான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, போட்டியின் விதிமுறைகள் தெளிவாக விளக்கப்பட்டு, அவை பின்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அதேவேளையில், போட்டியாளர்கள் போட்டியில் பங்கேற்க தேவையான அனைத்து பயிற்சிகளும் முறையாக வழங்கப்பட்டத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, திருமணமான ஒருவரின் பங்கேற்பு தொடர்பான குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த முரளி, அது அனைத்து போட்டியாளர்களின் ஒப்புதலுடன் நடந்ததாகவும், இதில் விதிமுறை மீறல் நிகழவில்லை எனவும் விளக்கம் அளித்தார்.
இக்குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக முரளி கூறினார்.
MK Asia Production Entertainment நிறுவனம் தனது மரியாதை மற்றும் நம்பகத்தன்மையை நிலைநிறுத்த, தொடர்ந்து செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார்.