
கோலாலம்பூர், ஜூலை-19- அரசியல் எல்லைகளைக் கடந்த ஒரு வலுவான முன்னணியை அமைக்க எதிர்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் உள்ளேயும் எதிர்கட்சிகளின் check and balance என்றழைக்கப்படும் அதிகார கண்காணிப்புத் திறனை வலுப்படுத்துவதே அதன் நோக்கமாகும்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணித் தலைவரும் முன்னாள் பிரதமருமான தான் ஸ்ரீ முஹிடின் யாசின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அதனைத் தெரிவித்தார்.
மக்கள் மற்றும் நாட்டு நலன்களை உட்படுத்திய விஷயங்களில் கூட்டாக முடிவெடுக்கவும் இது அவசியம் என்றார் அவர்.
முன்னதாக, அப்பரிந்துரை குறித்து கலந்தாலோசிப்பதற்காக எதிர்கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களுடன் முஹிடின் சந்திப்பு நடத்தினார்.
எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின், கெராக்கான் கட்சித் தலைவர் டத்தோ டோமினிக் லாவ், MIPP எனப்படும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சித் தலைவர் புனிதன் பரமசிவம், PEJUANG கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ முக்ரிஸ் மகாதீர், உரிமைக் கட்சித் தலைவர் Dr பி.ராமசாமி, MAP கட்சித் தலைவர் பி.வேதமூர்த்தி, PSM துணைத் தலைவர் S. அருட்செல்வன், PPP கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் சத்தியா சுதாகரன் உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர்.