
புக்கிட் ஜாலில், ஜூன்-11 – 2027 ஆசியக் கிண்ணக் கால்பந்து போட்டிக்கான F பிரிவு ஆட்டத்தில் மலேசியா 4-0 என வியட்நாமை வீழ்த்தியது.
அப்பெரிய வெற்றி, புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் நேற்றிரவு திரண்டிருந்த 60,000-க்கும் மேற்பட்ட இரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
உலகத் தர வரிசையில் 109-ஆவது இடத்திலிருக்கும் வியட்நாமுக்கு எதிராக கடந்த 11 ஆண்டுகளில் மலேசியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
ஆட்டம் தொடங்கியது முதலே Harimau Malaya அதிரடி தாக்குதல்களை மேற்கொண்டதால் வியட்நாமின் தற்காப்பு அரண் ஆடிப்போனது.
எனினும் முற்பாதி ஆட்டம் கோலின்றி சமநிலையிலேயே முடிந்தது.
பிற்பாதி தொடங்கியதும் 49-ஆவது நிமிடத்தில் Joao Vitor Figueiredo, Harimau Malaya-வின் முதல் கோலை புகுத்தி அரங்கை அதிரச் செய்தார்.
பின்னர் 59- ஆவது நிமிடத்தில் Holgado, 67-ஆவது நிமிடத்தில் Corbin-Ong மற்றும் 88-ஆவது நிமிடத்தில்
Dion Cools மூலம் அடுத்தடுத்து 3 கோல்களைப் போட்டு தேசிய அணி உள்ளூர் இரசிகர்களை திக்குமுக்காட செய்தது.
இவ்வெற்றியின் மூலம் F பிரிவில் 6 புள்ளிகளுடன் மலேசியா முதலிடத்தில் உள்ளது.
3 புள்ளிகளுடன் வியட்நாம் இரண்டாம் இடத்தை வகிக்கிறது.