
பேங்காக், ஆகஸ்ட்-11 –
கடந்த வியாழக்கிழமை பேங்காக்கில் வேலையில்லாத ஒருவரால் தீ வைத்து எரிக்கப்பட்ட இரண்டு மலேசிய சுற்றுலாப் பயணிகளுக்கு தாய்லாந்து அரசாங்கம் தலா 550,000 பாட் அல்லது 72,000 ரிங்கிட்வரை இழப்பீடு வழங்கும்.
மலேசியர்களின் மருத்துவ செலவுகளுக்கு அதிகப்பட்சமாக 500,000 பாட்வரை திரும்ப செலுத்தப்படும் என தாய்லாந்தின் சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
உணர்ச்சி ரீதியான துயரத்திற்காக அந்த இருவருக்கும் 50,000 பாட் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட இருவரின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சின் அந்நாட்டு சுற்றுலாத்துறை கூறியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை மேல் சிகிச்சைக்காக மலேசியாவிற்கு கொண்டுச் செல்ல அவர்களது குடும்பத்தினர் விரும்பினாலும் இப்போதைக்கு அவர்கள் பயணம் செய்வதற்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை.
கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் தாய்லாந்து தலைநகரில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில் விரத்தியடைந்த வேலையில்லாத ஆடவனால் அவ்விருவரும் தாக்கப்பட்ட பின் அவர்களுக்கு தீவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.