
கோலாலம்பூர், பிப்ரவரி-20 – சபா சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை உட்படுத்திய ஊழல் புகார் தொடர்பான வீடியோ நம்பகத்தன்மையற்றது என, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைவர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி கூறியிருப்பது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெர்சாத்து கட்சியில் மலாய்க்காரர் அல்லாதோருக்கான பெர்செக்குத்துப் பிரிவின் துணைத் தலைவர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் அவ்வாறு கூறியுள்ளார்.
ஆதாரங்களின் நம்பகத்தன்மையை முடிவு செய்வதும் அவற்றை ஏற்பதா இல்லையா என்பதை நிர்ணயிப்பதும் நீதிமன்றத்தின் வேலை; MACC-யின் வேலை அல்ல.
1977-ஆம் ஆண்டு டத்தோ ஹருன் இட்ரிஸ், 2009-ஆம் ஆண்டு V.சிவகுமார் உள்ளிட்டவர்களின் வழக்குகளே இதற்கு சிறந்த உதாரணம்.
அதாவது, ஆதாரங்கள் நம்பும்படியாக இல்லையென விசாரணை அதிகாரிகள் முடிவெடுத்தாலும், நீதிமன்றமே மேற்கண்ட வழக்குகளில் இறுதி முடிவெடுத்தது.
ஆக, ஊழலைத் துடைத்தொழிக்கும் பொறுப்பு வழங்கப்பட்ட ஆணையம் என்ற வகையில் முழு விசாரணை நடத்துவதில் தான் MACC-யின் கவனம் இருக்க வேண்டும்.
ஆதாரங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை இல்லையா என்பதை நீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டு விட வேண்டும்.
அதை விடுத்து முந்திக்கொண்டு இது போன்ற கருத்துகளை வெளியிட்டால் MACC-யின் வெளிப்படைத்தன்மையும் நேர்மையுமே கேள்விக் குறியாகி விடுமென சஞ்சீவன் நினைவுறுத்தினார்.
மக்களுக்கு உண்மைத் தெரிய வேண்டும்; அதற்கு நீங்கள் விரிவாக விசாரணை நடத்துங்கள், ஆனால் தீர்ப்பை எழுதுவதை நீதிமன்றத்திடம் விட்டு விடுங்கள் என, அறிக்கையொன்றில் சஞ்சீவன் கேட்டுக் கொண்டார்.