
கேப்பெங், நவ.17- அரசியல் கருத்து வேறுபாடுகளை எல்லாம் மறந்துவிட்டு, இந்து சமூகத்தின் நன்மையை கருதி ஆன்மீகத்திற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் பேரா மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் முதல் முறையாக முருக பெருமான் மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கம்போங் காபாயங் முருகன் ஆலய வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இம்மாநாட்டில் பெரும் அளவில் இளைஞர்கள் திரளாக கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் தமிழக முருக பக்தர்களுடன் உப்சி பல்கலைக்கழக மாணவர்கள், ஈப்போ ஆசிரியர் பயிற்சி கழக மாணவர்களும் திரளாக கலந்துகொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மாநாட்டை தொடக்கிவைத்து பேசியபோது பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.
இம்மாநாட்டிற்கான முழு செலவை பேரா அரசாங்கம் ஏற்றுக்கொண்டதோடு அடுத்த ஆண்டும் இம்மாநாடு தேசிய அளவில் நடைபெறும் என அவர் கூறினார்.
இந்நாட்டிலுள்ள 29 பல்கலைக்கழக இந்து மாணவர்களுக்கும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு வழங்கப்படும் என்பதோடு மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதியும் ஏற்பாடு செய்து செய்து தரப்படும் என்று அவர் கூறினார்.
இம்மாநாடு ஏற்பாட்டிற்கு உதவிய அரசு சார்பற்ற இயக்கங்கள் உப்பட அனைத்து தரப்பினருக்கும் சிவநேசன் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.



