
தாப்பா, ஏப் 10 – இந்த சனிக்கிழமையன்று நடைபெறும் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தினத்தில் ஒலி பெருக்கிகள் மற்றும் இசைக் கருவிகளை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் மையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் ஒலிபெருக்கிகள் அல்லது இசைக்கருவிகளைப் பயன்படுத்தி, குறிப்பாக வாகனங்கள் மூலம் எந்தவொரு அரசியல் பிரச்சாரமும் அனுமதிக்கப்படாது என்பதை அனைத்து உத்தேச வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் நினைவுபடுத்துவதாக அதன் செயலாளர் டத்தோ
இக்மால்ருடின் இஷாக் ( Ikmalrudin Ishak ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள எல்லையிலிருந்து 50 மீட்டர் தொலைவில் ஆதரவாளர்கள் காத்திருக்கும் அல்லது குழுமியுள்ள இடங்களையும் இந்த தடை உட்படுத்தியிருக்கும் என அவர் கூறினார்.
இது தேர்தல் குற்றச் சட்டம் 1954 (சட்டம் 5) இன் கீழ் ஒரு குற்றமாகும்.
வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் டேவான் மெர்தேக்காவில் காலை 9 மணி முதல் காலை 10 மணிவரை நடைபெறும். மேலும் வேட்பாளர்கனை முன்மொழிபவர் மற்றும் அவரது ஆதரவாளர் வேட்புமனுக்களை சமர்ப்பிக்கலாம்.
அனைத்து வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனு படிவங்களை பூர்த்தி செய்து, தேர்தல் நிர்வாக அதிகாரி அலுவலகம் அல்லது பேராக் மாநில தேர்தல் அலுவலகத்தில் முன்கூட்டியே சரிபார்க்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.