சிட்னி, நவம்பர்-10, சிட்னிக்கு அருகே ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையில் சரக்குக் கப்பலிலிருந்து விழுந்த மாலுமி, சுமார் 24 மணி நேரங்கள் கடலில் சிக்கித் தவித்தப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
வியாழன் இரவு உள்ளூர் நேரப்படி 11.30 மணியளவில் சிட்னிக்கு வடக்கே உள்ள துறைமுக நகரமான Newcastle கடற்கரையிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில், சிங்கப்பூரை தளமாகக் கொண்ட Double Delight என்ற சரக்குக் கப்பலில் அவர் பயணமானார்.
இந்நிலையில் கடலில் விழுந்தவர், வெள்ளிக்கிழமை மாலை 6.20 மணிக்கு அப்பக்கமாக வந்த பொழுதுபோக்கு மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டார்.
உடனடியாக அம்புலன்ஸ் வண்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 20 வயது அவ்விளைஞருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
Life jacket பாதுகாப்பு அங்கி அணிந்திருந்தவர், சுயநினைவோடு எங்களுடன் பேசும் நிலையிலிருந்தார்.
ஆனால் 24 மணி நேரங்கள் கடலில் தத்தளித்ததால், குளிரில் நடுங்கியதோடு மிகவும் சோர்வாகக் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
தற்போது சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரைத் தேடி மீட்பதற்காக 2 படகுகள், 2 ஹெலிகாப்டர்கள், ஒரு விமானம் ஆகியவை வெள்ளிக்கிழமை களத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.