கோலாலம்பூர், பிப் 24 – தமிழ்ப் பள்ளியில் படித்து தேசிய இடைநிலைப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் SPM தேர்வில் தமிழை ஒரு பாடமாக எடுப்பதில், பிரச்சனைகள் இருந்து வந்தன.
தற்போது முதலாம் படிவம் முதல் எஸ்பிஎம், எஸ்.டி.பி.எம் வரை இந்திய மாணவர்கள் தமிழ் மொழியை எடுப்பதற்குப் பள்ளி நிர்வாகம் முட்டுக்கட்டைகளை விதிப்பதாக தெரிய வந்துள்ளது.
சோதனையில் மாணவர்கள் தோல்வி அடைந்தால் பள்ளியின் முழு அடைவு நிலை பாதித்துவிடலாம் என்பதால், அதை நேரடியாகச் சொல்லாமல், தமிழ் மொழி பாடத்தை எடுத்துப் படிக்காமல் இருக்க நூதனமான முறையில் பள்ளி நிர்வாகத்தினர் ‘மிரட்டல் விடுவதாக கூறப்படுகிறது.
வகுப்புகளுக்கு ஒழுங்காக வருவதில்லை, பாடங்களையும் பயிற்சிகளையும் சரியாகச் செய்வதில்லை, மதிப்பெண்கள் மிகக் குறைவாக இருக்கிறது, இப்போது கோவிட் பெருந்தொற்று என பல காரணங்கள் முன் வைக்கப்படுவதாக மலேசியத் தமிழ் பள்ளிகளின் கல்வி நலனபிவிருத்தி -மேம்பாட்டுச் சங்கத்தின் தலைவர் எம். வெற்றிவேலன் தெரிவித்தார்.
எனவே, இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் தரப்புக்கு தகவல் தெரிவிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். மாணவர்கள் சார்பில் பெற்றோர்களும் புகார் அளிக்கலாம்.
கூகள் படிவம் மூலமாக சேகரிக்கப்படும் அந்த விபரங்களைக் கொண்டு கல்வியமைச்சில் புகார் அளிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென எம். வெற்றிவேலன் கூறினார்.
கூகல் படிவம் ; https://forms.gle/JVboJL7uhTSjdW4i7
மின்னஞ்சல் ; mtsewa27@gmail.com