
போர்டிக்சன், மார்ச்-22 – நெகிரி செம்பிலான், போர்டிக்சனில் சாலையோர பெத்தாய் வியாபாரிக்கும் நகராண்மைக் கழக அமுலாக்க அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம், நல்ல முறையில் தீர்க்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு நகராண்மைக் கழகத் தலைவர், பெத்தாய் வியாபாரியான முதியவர் மொஹமட் நூர் சாஆட்டை பாசிர் பாஞ்சாங்கில் அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.
ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் Dr ஜி.ராஜசேகரன் மத்தியஸ்தராக செயல்பட்டார்.
அந்த பெத்தாய் வியாபாரி சட்டப்படி தனது வியாபாரத்தைத் தொடர ஏதுவாக அவருக்கு தற்காலிக உரிமம் வழங்கவும் அச்சந்திப்பின் போது நகராண்மைக் கழகம் ஒப்புக் கொண்டது.
முதல் நாள் ஏற்பட்ட பிரச்னையில் பெத்தாய்களை அவர் தூக்கி வீசியதால் ஏற்பட்ட நட்டத்தைக் கருத்தில் கொண்டு, போர்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினரும் மந்திரி பெசருமான டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண் சார்பில் சிறு நிதியுதவியும் வழங்கப்பட்டது.
அதனை ராஜசேகரன், மொஹமட் நூரிடம் ஒப்படைத்தார்.
இவ்விவகாரத்தை பேச்சுவார்த்தை மற்றும் நல்ல புரிந்துணர்வோடு தீர்க்க உதவிய அனைவருக்கும் ராஜசேகரன் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
நேற்று நடந்த சம்பவத்தில், வாகன நிறுத்துமிடத்தில் தனது மோட்டார் சைக்கிளில் பெத்தாய்களை வைத்து அம்முதியவர் விற்றுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த போர்டிக்சன் நகராண்மைக் கழக அமுலாக்க அதிகாரி அவரை அங்கு வியாபாரம் செய்ய வேண்டாம் என்றார்.
இதனால் ஏற்பட் வாக்குவாம் முற்றி, அம்முதியவர் பெத்தாய்களை சாலையில் வீசி எறிந்ததார்.
சம்பவ வீடியோ வைரலாகி, முதியவருக்கு அனுதாபம் குவிந்தது குறிப்பிடத்தக்கது.