
கோலாலம்பூர், அக்டோபர்-22, 2025 வரவு செலவுத் திட்டத்தில் இந்தியச் சமூகத்துக்கு அறிவிக்கப்பட்ட 130 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை, 200 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்த வேண்டும்.
பினாங்கு, பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், அரசாங்கத்தை அவ்வாறுக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட அதே தொகை இவ்வாண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து இந்தியர்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது, தமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதாக அவர் சொன்னார்.
இவ்வேளையில், பொதுச் சேவைத் துறையில் மலாய்க்காரர் அல்லாதோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும், முஸ்லீம் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 50 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 100 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட வேண்டுமென்றும் குவான் எங் கோரிக்கை விடுத்தார்.
அதே சமயம், நாடு முழுவதுமுள்ள பள்ளிகளைச் சீரமைக்கவும் பராமரிக்கவும் ஒதுக்கப்பட்டுள்ள 1 பில்லியன் ரிங்கிட் நிதி, 1.5 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட வேண்டுமென, மக்களவையில் பட்ஜெட் மீதான விவாத உரையில் பேசிய போது DAP தேசியத் தலைவருமான அவர் சொன்னார்.