ம.இ.கா தலைவர்களுடன் சந்திப்பு நடத்தினாரா? சாஹிட்டின் பேச்சு எனக்கே ஆச்சரியமாக உள்ளது என்கிறார் விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், அக்டோபர்-13,
கடந்த வாரம் ம.இ.கா தலைவர்களை தாம் 2,3 தடவை சந்தித்து பேசியதாக தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறியிருப்பது, ம.இ.கா தேசியத் தலைவரான தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரனையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ம.இ.கா தலைவர் என்ற முறையில் ஆகக் கடைசியாக சாஹிட்டை தாம் சந்தித்து பேசி ஈராண்டுகள் ஆகி விட்டது.
“அப்படியிருக்க அவர் யாருடன் பேசினார் என்று எனக்குத் தெரியவில்லை” என விக்னேஸ்வரன் வியப்புடன் கூறினார்.
3 மாதங்களுக்கு முன்னர் இருவரும் சந்தித்துக் கொண்டது கூட தேசிய ஒருமைப்பாடு தொடர்பான கூட்டத்தில் தான்…
தவிர, கட்சியின் எதிர்காலம் குறித்து இதுவரை சாஹிட்டுடன் தாம் எதுவும் பேசவில்லை; கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெறவிருந்த சந்திப்பும் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டதை விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.
கட்சி விவகாரம் குறித்த பேச்சுகள் உயர் மட்ட தலைவர்களுக்கு இடையில் நடைபெறுவதே வழக்கம் என்றார் அவர்.
ம.இ.கா பெரிக்காத்தானில் இணையப் போவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, “சில தலைவர்களுக்கு ‘பொம்மைகள்’ தேவைப்படலாம், அப்படி ‘பொம்மைகள்’ கிடைக்காதபோது, அவர்கள் தங்கள் கால்களை மிதிக்கத் தொடங்குவார்கள்” என சாஹிட் யாரையோ மறைமுகமாகத் தாக்கும் வகையிலும் முன்னதாக பேசியிருந்தார்.
அதோடு, சில தலைவர்களின் குரல் அடிமட்ட தொண்டர்களின் குரலைப் பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.