கோலாலம்பூர், நவம்பர்-6 – இந்தோனீசியாவின் பாப்புவா மாகாணத்தில் 121 பயணிகளுடன் விமானமொன்று புறப்படுவதற்கு தயாரான போது, அதன் இயந்திரத்தில் தீ ஏற்பட்டதால் பயணிகள் பதற்றமடைந்து இடமே கலவரமானது.
ஜெயபுராவில் உள்ள செந்தானி விமான நிலையத்தில், Trigana விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் செவ்வாய்க்கிழமையன்று அச்சம்பவம் நிகழ்ந்தது.
விமானத்தின் இயந்திரத்தில் தீ ஏற்பட்டதை முதலில் கண்டவர் எனக் கூறப்படும் ஒரு பயணி, பதற்றத்தில் அவசரக் கதவைத் திறந்து விட்டார்.
இதனால் மற்ற பயணிகளும் பதற்றமடைந்து, ஆளாளுக்கு வெளியேற முயன்றதால் நிலைமை ஒரே கலவரமானது.
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 4 பயணிகள் காயமடைந்தனர்.
எந்தவோர் அசம்பாவிதமும் நிகழும் முன்னரே விமானம் காலியாக்கப்பட்ட போதும், பாதுகாப்புக் கருதி அவ்விமானப் பயணம் இரத்துச் செய்யப்பட்டது.
விமானத்தின் இயந்திரத்தில் தீ ஏற்பட்டதற்கான காரணத்தை இந்தோனீசிய தேசிய போக்குவரத்து பாதுகாப்பு செயற்குழு விசாரித்து வருகிறது.
குறிப்பாக, விமானத்தின் அவசரக் கதவைத் திறந்து விட்டு, கலவரத்தைத் ‘தொடக்கி’ வைத்த பயணியும் அடையாளம் காணப்பட்டு வருகிறார்.