Latestமலேசியா

இந்தோனேசியர்கள் மீது MMEA நடத்திய துப்பாக்கிச் சூடு; போதைப்பொருள், சுடும் ஆயுதக் கடத்தல் சம்பந்தப்பட்டிருக்கலாம் – உள்துறை அமைச்சர்

கோலாலம்பூர், பிப்ரவரி-3 – ஜனவரி 24-ஆம் தேதி MMEA எனப்படும் மலேசியக் கடல் அமுலாக்கத் துறை அதிகாரிகளால் 5 இந்தோனீசியர்கள் சுடப்பட்ட சம்பவம், போதைப்பொருள் மற்றும் சுடு ஆயுதக் கடத்தலை உட்படுத்தியிருக்கக் கூடும்.

உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் அதனைக் கோடி காட்டியுள்ளார்.

அந்த 5 இந்தோனீசியவர்களும் முறையான பயணப் பத்திரம் இல்லாதவர்கள்; கள்ளக்குடியேறிகளைக் கடத்தி வரும் ஓர் ஆடவரை தொடக்கக் கட்ட விசாரணையின் போது போலீஸ் கைதுச் செய்ததையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

பழையச் சம்பவங்களில் இது போன்று நிகழ்ந்திருப்பதால், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என சைஃபுடின் சொன்னார்.

அதே சமயம், நியாயமான விசாரணையை உறுதிச் செய்ய, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட MMEA அதிகாரிகளும், 1960-ஆம் ஆண்டு சுடும் ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.

விசாரணை முடியும் அவரை அவர்கள் விடுப்பில் செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

இவ்வேளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 4 இந்தோனீசியர்கள் தொடர்ந்து விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்; அவர்களின் சகா சம்பவத்தன்று கொல்லப்பட்டார்.

மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்ற போது தஞ்சோங் ரூ கரையோரப் பகுதியில் அவர்கள் சுடப்பட்டனர்.

இவ்விவகாரம் இந்தோனீசியாவில் பிரச்னையாகி ஜகார்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு, முட்டையெல்லாம் வீசப்பட்டது.

அச்சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை மலேசியா விரிவாக விசாரிக்குமென எதிர்பார்ப்பதாக இந்தோனீசிய அதிபர் பிராபோவோ சுபியாந்தோ கூறியிருந்தார்.

மலேசியா வெளிப்படையாக விசாரணை நடத்தி இங்குள்ள இந்தோனீசியத் தூதரகத்திடம் அறிக்கைத் தருமென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் உத்தரவாதமளித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!