Latestமலேசியா

இனம், தோல் நிறம் ஒரு தடையல்ல; கடமைதான் முக்கியம்: Hannah Yeoh

புத்ராஜெயா, டிசம்பர் 22 – இனம் அல்லது ஒருவரின் நிறம் அவரின் நிர்வாகத் திறனை நிர்ணயிப்பதில்லை. மாறாக அது பொறுப்பு மற்றும் நம்பிக்கை சார்ந்த விடயம் என்று கூட்டாட்சி துறை அமைச்சர் Hannah Yeoh தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், 2008 முதல் இன்று வரை சட்டமன்ற உறுப்பினர், சிலாங்கூர் சட்டமன்ற சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர், துணை அமைச்சர், இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் என பல பொறுப்புகளில் பதவி வகித்து வந்தபோதும் தனது கவனம் எப்போதும் கொள்கைச் சார்ந்தே இருந்ததென்றும், இனப்பாகுபாட்டை சார்ந்திருக்கவில்லையென்றும் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில், ஹன்னா யோ இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சிலிருந்து கூட்டரசு பிரதேச அமைச்சுக்கு மாற்றப்பட்டார். இதனை இன அடிப்படையில் விமர்சித்ததை பிரதமர் அன்வார் இப்ராஹிம் கடுமையாக கண்டித்திருந்தார்.

கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான் ஆகிய கூட்டாட்சி பிரதேசங்களை, சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாக அடிப்படையில் சுத்தமான பகுதிகளாக மாற்றுவதுதான் தனது முதன்மை இலக்கு என ஹனா யோ, தெரிவித்தார்.

மேலும், அனைத்து கூட்டரசு பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் இணைந்து செயல்படுவதே தனது நிர்வாகத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கம்போங் பாரு மற்றும் உள்ளூர் நிர்வாக அமைப்புகள் தொடர்பான விஷயங்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து விரிவான விளக்கங்கள் பெற்ற பின்னரே தீர்மானிக்கப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!