கோலாலம்பூர், ஜனவரி-10, இலக்கிடப்பட்ட டீசல் மானிய முறையின் கீழ் அரசாங்கம் ஆண்டுக்கு 7.5 பில்லியன் ரிங்கிட்டை மிச்சப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் கணிக்கப்பட்டதை விட இது கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகமென, இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.
கடந்தாண்டு ஜூலையில் அறிமுகமான டீசல் உதவித் தொகை மறுசீரமைப்பின் கீழ், மாதத்திற்கு 200 மில்லியன் ரிங்கிட் அல்லது ஆண்டுக்கு 4 பில்லியன் ரிங்கிட் வரையிலும் மிச்சமாகும் என்று தான் கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது மாதத்திற்கு 600 மில்லியன் ரிங்கிட் வரை மிச்சமாவதாக அவர் சொன்னார்.
ஆக இத்தனை காலமும் நாம் கணித்ததை விட மானியக் கசிவு மோசமாக இருந்துள்ளது; இது வெறும் தீபகற்ப மலேசியாவை மட்டுமே உட்படுத்தியது என்றார் அவர்.
இலக்கிடப்பட்ட மானிய முறை, கசிவைத் தடுக்க பெரிதும் உதவியுள்ளதை, மலேசியப் பொருளாதார ஆய்வரங்கில் நேற்று உரையாற்றிய போது அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
2019-ல் 1.4 பில்லியன் ரிங்கிட்டாக இருந்த டீசல் உதவித் தொகைக் கசிவு, 2023-ல் பத்து மடங்கு அதிகரித்து 14.3 பில்லியன் ரிங்கிட்டாக பதிவாகியது.
இதையடுத்து, தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த பயனர்களுக்கு இலக்கிடப்பட்ட மானிய முறையை அமுல்படுத்த அமைச்சரவை முடிவுச் செய்துள்ளதாக கடந்தாண்டு மே மாதம் பிரதமர் அறிவித்திருந்தார்.