ஷா ஆலாம், நவம்பர்-12 – இல்லாத ஓர் இணைய முதலீட்டுத் திட்டத்தை நம்பி 1.6 மில்லியன் ரிங்கிட் பணத்தை பறிகொடுத்துள்ளார் சிலாங்கூரைச் சேர்ந்த 56 வயது வியாபாரி.
56 வயது அந்நபர், WeChat சமூக ஊடகத்தில் வந்த இணைப்பு link-கைத் தட்டி முதலீட்டுத் திட்டத்திற்கான செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளார்.
அச்செயலியில் கணக்கைத் திறந்தவர் அதில் குறிப்பிட்ட தொகையை முதலீடாகப் போட, பணத்தைப் போட்ட சில நாட்களிலேயே அதற்கான இலாபமும் வந்திருக்கிறது.
ஆனால் அதை அவரால் மீட்க முடியவில்லை.
கேட்டால் ஏதேதோ சாக்குபோக்கு சொல்லப்பட்டது.
இலாபப் பணத்தை எடுக்க வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமென்றும் கூறப்பட்டது.
சற்றும் யோசிக்காமல், சந்தேக நபர் கொடுத்த 4 வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 1.69 மில்லியன் ரிங்கிட் பணத்தை மொத்தமாக மாற்றியுள்ளார்.
எனினும் சொல்லியபடி இலாபத் தொகையும் வரவில்லை, போட்ட முதலீடும் கிடைக்கவில்லை.
இதையடுத்தே தாம் மோசடிக்கு ஆளாகியிருப்பதை உணர்ந்து, சனிக்கிழமையன்று அவர் போலீசில் புகார் செய்தார்.