
கோலாலம்பூர், டிசம்பர்-16 – உள்ளதை விட கூடுதலாக வருமான வரி செலுத்தியவர்களுக்கு இவ்வாண்டு RM14.55 பில்லியன் தொகையை, உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN திருப்பிச் செலுத்தியுள்ளது.
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது 17.5 விழுக்காடு உயர்வாகும் என, நிதித் துறை துணையமைச்சர் Lim Hui Ying தெரிவித்தார்.
இது 3.47 மில்லியன் வரி செலுத்துநர்களை உட்படுத்தியுள்ளது.
அவர்களில் 3.3 மில்லியன் பேருக்கு பணம் முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்டு விட்டது; அதற்கான தொகை RM13 பில்லியனை கடந்துள்ளதாக அவர் சொன்னார்.
தனிநபர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பணப்புழக்க சவால்களை எதிர்கொள்ளும் வணிகங்களுக்கு பணம் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ளவர்களுக்கு வரிப் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.
அதுவும் கணக்குத் தணிக்கைக்கு முன்பே அவற்றைத் திருப்பிச் செலுத்தும் நடைமுறை பின்பற்றப்பட்டதாக துணையமைச்சர் மேலவையில் தெரிவித்தார்.



