
கோலாலம்பூர், அக் 24 – குற்றச் செயல் தொடர்பு இல்லாத விவகாரங்கள் குறித்த அறிக்கையை போலீஸ் அகப் பக்கத்தில் பதிவிடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேல் விசாரணை தேவைப்படாத அறிக்கைகள் மற்றும் அது தொடர்பான தகவல்களை e -Reporting PDRM என்ற அகப்பக்கத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம் என அரச மலேசிய போலீஸ் படையின் சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளக் கார்டு , வாகன லைசென்ஸ், கிரடிட் கார்டுகள் அல்லது வங்கி கார்டு, கை தொலை பேசி, மடிக் கணினி மற்றும் சாலை வரி வில்லைகள் (ரோட்டெக்ஸ்) போன்றவை காணாமல் போயிருந்தால் அது குறித்து அகப்பக்கத்தில் அறிக்கை வாயிலாக தெரிவிக்கலாம். இதுதவிர வீட்டு வேலைக்காரப் பெண் வீட்டிலிருந்து வெளியேறும் சம்பவங்கள் அல்லது வெள்ள பேரிடரின்போது காணாமல்போகும் பொருட்கள் குறித்தும் அகப்பக்கத்தின் வாயிலாக தெரிவிக்க முடியும். 18 வயதுக்கு மேற்பட்ட மலேசிய பிரஜைகள் மற்றும் பதிவுபெற்ற பயனீட்டாளர்கள் அகப்பக்கத்தின் மூலம் இந்த விவரங்களை தெரிவிக்கலாம்.