
ரியாத், மார்ச்-24-மத்தியக் கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், ஈரானுக்கு எதிரான போரில், சவூதி அரேபியாவும் UAE எனப்படும் ஐக்கிய அரபு சிற்றரசும் குதிக்கப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவுடன் இணைவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை அவை எடுத்துள்ளதாக, Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, சவூதி அரேபியா, அதன் முக்கியமான விமானத் தளத்தை பயன்படுத்த அமெரிக்கப் படைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஐக்கிய அரபு சிற்றரசோ, ஈரான் தொடர்புடைய சில அமைப்புகளை மூடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
இது ஈரானுக்கு எதிரான அதன் கடுமையான அணுகுமுறையை காட்டுகிறது.
இது முன்பு அவர்கள் எடுத்திருந்த நடுநிலை நிலைப்பாட்டிலிருந்து பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
போரில் இணையுமாறு அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் ஏற்கனவே வளைகுடா நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது நினைவிருக்கலாம்.
அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக ஈரான் மேற்கொண்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள், வளைகுடா நாடுகளின் எண்ணெய் உள்கட்டமைப்புகளை குறிவைத்து வந்தன.
இதனால் அவ்வட்டாரத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதும், சவூதி மற்றும் UAE போரில் குதிக்க காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
அமெரிக்கா – இஸ்ரேலுடன் நாடுகள் அணி சேர்வதால், வளைகுடா நெருக்கடி ஒரு முழுமையான போராக மாறுமா என்ற அச்சம் அதிகரித்துள்ளது…



