
ஈப்போ, பிப் 4 -உணவகம் ஒன்றில் கடந்த மாதம் வெறித்தனமாக நடந்து கொண்ட மூன்று குற்றங்களை ஒப்புக்கொண்ட மனநிலைப் பாதிக்கப்பட்ட மற்றும் தனித்து வாழும் பெண் ஒருவருக்கு ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம்
11, 800 ரிங்கிட் அபராதம் விதித்தது.
மாஜிஸ்திரேட் அனிஸ் ஹனினி அப்துல்லா ( Majistret Anis Hanini Abdullah )மற்றும் மாஜிஸ்திரேட் முகமட் ஹரித் முகமட் மஸ்லான் (Mohd Harith Mohd Mazlan )ஆகியோர் முன்னிலையில் வெவ்வேறு நீதிமன்றங்களில் 29 வயதுடைய நுர்பராஹனிம் சைய்ட் ( Nurfarahnim Soaid ) மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி தாமான் தாசேக் டாமாய்(Taman Tasek Damai) யிலுள்ள உணவகத்தில் முகமட் முபராகாலி (Mohamed Mubarakali)என்பவரை அறைந்தது மற்றும் குத்தியதாக கொண்டுவரப்பட்ட முதல் குற்றச்சாட்டை மாற்று திறனாளிக்கான அடையாள அட்டையை வைத்திருந்த அப்பெண் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து 1,800 ரிங்கிட் அபராதம் அதனை செலுத்தத் தவறினால் இரண்டு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்கும்படி உத்தரவிடப்பட்டது.
மேலும் மற்றொரு ஆடவரை முள்கரண்டியினால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக அப்பெண் மீது மற்றொரு நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டையும் , அந்த உணவகத்தின் கண்ணாடி அறையில் வைக்கப்பட்டிருந்த மூன்று கண்ணாடி மங்குகளை உடைத்த மூன்றாவது குற்றச்சாட்டையும் மூன்று குழந்தைகளுக்கு தாயான அந்த அப்பெண்மணி ஒப்புக் கொண்டார்.
மேலும் இறைச்சி வெட்டும் கத்தியை பயன்படுத்தி அந்த உணவகத்தின் கண்ணாடியை உடைத்ததால் 45,000 ரிங்கிட் இழப்பையும் அப்பெண் ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது. இரண்டாவது குற்றத்திற்கு 6,000 ரிங்கிட் அபராதமும் மூன்றாவது குற்றத்திற்கு 4,000ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.



