
சிரம்பான், ஏப்ரல்-2- நெகிரி செம்பிலான், செனாவாங்கில் பெண் வாகனமோட்டியை இராணுவ வீரர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தை போலீஸே விசாரிக்கிறது.
இராணுவத் தலைமைத் தளபதி தான் ஸ்ரீ முஹமட் ஹஃபிசுடின் ஜன்தான் அதனைத் தெரிவித்தார். அவ்விவகாரத்தை இராணுவம் அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது; இந்நிலையில் இராணுவப் படையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் கடுமையாகக் கருதுவதாக அவர் சொன்னார்.
எனினும் சந்தேக நபர் இன்னமும் விசாரணையில் உள்ளார்; எனவே மேற்கொண்டு கருத்துரைப்பதோ யூகங்களை எழுப்புவதோ சரியாக இருக்காது; போலீஸ் அவர்களது கடமையைச் செய்யட்டும் என்றார் அவர்.
அச்சம்பவம் மீதான விசாரணை புக்கிட் அமானுக்கு மாற்றப்பட்டதால், 35 வயது அந்த இராணுவ வீரர் முன்னதாக போலீஸ் உத்தரவாதத்தில் விடுவிக்கப்பட்டார். 4 நாட்களுக்கு முன் ஜாலான் பெர்சியாரான் செனாவாங் எம்பாட்டில் ஒரு விபத்துக்குப் பிறகு, 28 வயது காரோட்டியான பெண்ணை பலங்கொண்டு குத்தியதன் பேரில் அவர் கைதாகியிருந்தார்.
குத்துப்பட்ட பெண்ணுக்கு வலது விலா எலும்பில் காயங்களும் தலையின் பின்புறத்தில் வீக்கமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இரவு 10.15 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது Perodua Axia காரில் காரில் சென்றுகொண்டிருந்த அப்பெண், திடீரென சாலையைக் கடந்த சந்தேக நபரின் 34 வயது மனைவி, 7 வயது மகள் இருவரையும் மோதுவதைத் தவிர்க்க முயன்று, அது முடியாமல் போனது.
இதனால் தாயும் மகளும் சிராய்ப்புக் காயங்களுக்கு ஆளானதைக் கண்டு சினடைந்த அவ்வாடவர், அப்பெண்ணின் கார் கதவைத் திறந்து தாக்கினார்.
சம்பவ வீடியோவும் பெரிய அளவில் வைரலானது.