
கோலாலம்பூர், ஏப்ரல்-4-உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்தாலும் தாங்கள் “அதிக இலாபத்தில் மிதக்கவில்லை” என தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் தெரிவித்துள்ளது.
எண்ணெய் விலை உயர்வு மேலோட்டமாக இலாபத்தை அதிகரிப்பது போல தோன்றினாலும், செயல்பாட்டு செலவுகளும் அதே அளவில் உயருகின்றன என, பெட்ரோனாஸ் தலைமை செயலதிகாரி Tengku Muhammad Taufik Aziz கூறினார்.
கச்சா எண்ணெய் கொள்முதல், சுத்திகரிப்பு, செயலாக்கம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செலவுகள் அதிகரிப்பதால், மொத்த இலாபம் குறைகிறது.
எண்ணெய் உற்பத்தி மட்டுமின்றி, நடுநிலை மற்றும் கீழ்நிலை செயல்பாடுகளிலும் பெட்ரோனாஸ் ஈடுபட்டிருப்பதால், விலை உயர்வு நேரடியாக அதிக இலாபமாக மாறாது என அவர் விளக்கினார்.
வெறும் இலாபம் பார்ப்பது மட்டுமே இலக்கல்ல…மாறாக, மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிச் செய்வதும் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாகும் என அவர் சொன்னார்.
உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்வு பெட்ரோனாஸுக்கு நேரடியாக மிகப்பெரிய இலாபமாக மாறும் என்ற பொது மக்கள் மத்தியில் நிலவும் கண்ணோட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில் இவ்விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோனாஸ் நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக வரிகள், இலாபப் பங்குகள் மற்றும் பெட்ரோலியம் தொடர்பான வருவாய்கள் மூலம் அரசாங்கத்தின் வருவாய்க்கு முக்கிய பங்களிப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது



