ஜாகார்த்தா, நவம்பர்-15 – இந்தோனீசியாவின் Lewotobi Laki-Laki எரிமலையிலிருந்து சாம்பல் பரவல் இல்லை என்பது கண்டறியப்பட்டதால், இரு முக்கிய விமான நிலையங்கள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளன.
பாலி தீவில் உள்ள I Gusti Ngurah Rai அனைத்துலக விமான நிலையம், லோம்போக் அனைத்துலக விமான நிலையம் ஆகியவைவே அவ்விரண்டு விமான நிலையங்களாகும்.
அவ்வகையில் பாலியிலிருந்து வியாழக்கிழமை காலை ஹோங் கோங்கிற்கு பயணச் சேவை மேற்கொள்ளப்பட்ட வேளை, ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்தும் ஒரு விமானம் வந்திறங்கியது.
துணைக்கோளப் படங்களை நன்காராய்ந்ததில், எரிமலை சாம்பல் பரவல் இல்லையென்பது உறுதிச் செய்யப்பட்டதாக, வானிலை ஆராய்ச்சி மையம் முன்னதாக அறிவித்திருந்தது.
Nusa Tenggara Timur-ரில் அமைந்துள்ள இந்த Lewotobi எரிமலை தொடர்ந்து குமுறி வருவதால், வானில் சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை எழுந்துள்ளது.
இதனால் பாதுகாப்புக் கருதி 13,000-க்கும் மேற்பட்டோர் வேற்றிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதே அச்சம் காரணமாக பாலி மற்றும் லோம்போக் விமான நிலையங்களில் புதன்கிழமையன்று ஏராளமான உள்நாட்டு-வெளிநாட்டு விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டன.