
கோலாலம்பூர், பிப்ரவரி-26- புக்கிட் காயு ஹித்தாம் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பின் காமண்டர் முதிர்நிலை துணை கமிஷனர் முகமட் நசாருதீன் எம். நசீருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிக் சூடு தாக்குதல் எல்லை தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராடும் முன்னணி அமலாக்கப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்து கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலை நாட்டின் எல்லைகளில் கடத்தல் நடவடிக்கைகளின் தீவிரத்தின் மோசமான பிரதிபலிப்பு என்று மலேசிய எல்லை கட்டுப்பாடு பாதுகாப்புத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ சுஹாய்லி முகமட் ஸைய்ன் (Mohd Shuhaily Mohd Zain) விவரித்தார்.
எல்லை கட்டுப்பாடு பாதுகாப்பு அமைப்பு 14 மாதம் கொண்ட ஒரு அமைப்பாகும். இந்த அமைப்புக்கு எதிரான அச்சுறுத்தலை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளும் அதே வேளையில் சிந்திக்க வேண்டிய நியாயமான கேள்வியாகவும் இந்த விவகாரம் இருப்பதாக அவர் கூறினார்.
அமலாக்கத்தின் தொடக்கக்கால வெற்றிகள் கூட குற்றவியல் கூறுகளிடமிருந்து எவ்வாறு எதிர்வினையைத் தூண்டக்கூடும் என்பதை இந்த அத்தியாயம் அடிக்கடி கோடிகாட்டுவதாக சுஹைய்லி தெரிவித்தார்.
20 ஆண்டுகளாக மோசமாக இருந்துவரும் எல்லை கடந்த கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்பு பேசியதையும் சுஹைலி சுட்டிக்காட்டினார்.
வடக்கு எல்லைப் பாதையில் அண்மையகால தொடர்ச்சியான பறிமுதல் மற்றும் கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு அமலாக்க அதிகாரிகளை அச்சுறுத்துவதே இந்த சம்பவத்தின் நோக்கமாக இருக்கலாம் என்று தொடக்கக்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.



