
வாஷிங்டன், மார்ச்-22 – தணிக்கை என்ற பெயரில் உள்ளடக்கங்களைச் சட்ட விரோதமாக முடக்குவதாகக் குற்றம் சாட்டி, இந்திய அரசாங்கத்தின் மீது இலோன் மாஸ்க்கின் X தளம் வழக்குத் தொடுத்துள்ளது.
தென்னிந்திய மாநிலம் கர்நாடகாவின் உயர் நீதிமன்றத்தில் இம்மாதத் தொடக்கத்தில் அவ்வழக்குப் பதிவானது.
X தளப் பதிவுகளைப் பேரளவில் நீக்குமாறு அரசு நிறுவனங்கள், மாநில அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீஸ் உத்தரவுகளைப் பிறப்பிக்க ஏதுவாக, இந்திய அரசாங்கம் ஒரு கணினி முறையை உருவாக்கியிருப்பதாக X குற்றம் சாட்டுகிறது.
அந்த ‘வடிகட்டும் இணைய அகப்பக்கம்’ இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் அந்நாட்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்திற்கும் எதிரானது என X நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளது.
எல்லை மீறியத் தணிக்கையால், X தளத்தில் சட்டப்பூர்வ தகவல்கள் முடக்கப்படுகின்றன.
இதனால் வர்த்தகமும் பாதிக்கப்படுவதாக X சுட்டிக் காட்டியது.
இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்த இலோன் மாஸ்க் முயன்று வரும் நிலையிலும், வர்த்தக மற்றும் குடிநுழைவு விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள நிலையிலும், இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
எனினும் இது வெறும் சட்ட சிக்கல் அல்ல; அதற்கும் மேலான புவிசார் அரசியல் பிரச்னை என பார்வையாளர்கள் கருதுகின்றனர்.