சித்தியவான், நவ 22 – Dindings திருவள்ளுவர் மன்றத்தின் தலைவரும் , எழுத்தாளருமான கோ. முனியாண்டி காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று காலையில் இறந்தார்.
பேரா சித்தியவானைச் சேர்ந்த 76 வயதுடைய அவர் பல ஆண்டு காலாமாக நாவல் , சிறுகதை , கட்டுரை மற்றும் புதுக்கவிதை என தமிழ் இலக்கியத்துறையில் பல படைப்புகளை தந்துள்ளார். பேராக் சித்தியவான் சப்போக் தோட்டத்தை பின்னணியாக கொண்ட கோ.முனியாண்டிக்கு மனைவி சிவகாமியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர்.
புதுக்கவிதையில் தீவிர ஈடுபாடு கொண்ட அவர் , கெடா எழுத்தாளரான மறைந்த எம்.ஏ இளஞ்செல்வனுடன் இணைந்து நாட்டில் பல இடங்களில் புதுக்கவிதை கருத்தரங்குகளையும் நடத்தியுள்ளார். அதோடு நவீன சிந்தனை அமைப்பை தொடக்கிவைத்து பல நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.
சமூக ஈடுபாடு கொண்டவரான முனியாண்டி , அவர் ஆயர் தாவார் மணிமன்றத்தில் இணைந்து பல்வேறு சமூதாய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இலக்கிய போட்டிகள், கருத்தரங்கு போன்ற நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளார்.
பத்திரிகை நிருபராகவும் பணியாற்றியுள்ள கோ.முனியான்டி தனது இலக்கிய படைப்புகளுக்காக பல்வேறு பரிசுகளையும் வென்றுள்ளார். மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் ஆதி விருது, ஈப்போ தமிழர் திருநாள் இயக்கத்தின் குறிஞ்சி குமாரனார் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
அவரது இறுதிச் சடங்கு நவம்பர் 25ஆம் தேதி திங்கட்கிழமை , காலை 9 மணியளவில் ,எண் 37, கம்போங் அம்பிகா, ஆயர் தாவர் என்ற முகவரியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இதனிடையே கோ.முனியாண்டியின் மறைவுக்கு பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஙே கூ ஹம்மின் ( Ngeh Koo Ham ) அவர்களின் அரசியல் செயலாளர் தினகரன் கோவிந்தசாமி, உட்பட பேராவிலுள்ள பல்வேறு பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.