
கோத்தா கினபாலு , பிப் 14 – சபாவிலுள்ள மாவட்டம் ஒன்றில் சாலையில் குற்றம் புரிந்த லோரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக போக்குவரத்து நிறுவனங்களிடமும் சுமார் 100,000 ரிங்கிட் லஞ்சம் பெற்ற அமலாக்க அதிகாரி ஒருவரை சபா ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி (MACC) கைது செய்தது.
சுமார் 40 வயது மதிக்கத்தக்க அந்த சந்தேகப் பேர்வழி நேற்றிரவு 8 மணியளவில் சபா எம்.ஏ.சி.சி அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிப்பதற்கு வந்தபோது கைது செய்யப்பட்டதாக எம். ஏ.சி.சிக்கு நெருக்கமான தகவல்கள் கூறின.
கடந்த செவ்வாய்க்கிழமை அமலாக்க நிறுவனத்தின் உதவியாளர் ஒருவர் 11,000 ரிங்கிட் லஞ்சம் பெற்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த அமலாக்க அதிகாரி கைது செய்யப்பட்டார்.
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்வரை சுமார் 30 போக்குவரத்து நிறுவனங்களிடம் அந்த சந்தேகப் பேர்வழி லஞ்சம் கேட்டதோடு மாதந்தோறும் 300 ரிங்கிட் முதல் 3,000 ரிங்கிட்வரை பெற்று வந்ததாகவும் ஒட்டு மொத்தமாக மொத்தம் 100,000 ரிங்கிட்டை லஞ்சமாக பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதை சபா எம்.ஏ.சி.சி இயக்குநர் டத்தோ S. கருணாநிதி ( Karunanithy ) உறுதிப்படுத்தினார்.
2009 ஆம் ஆண்டின் MACC சட்டத்தின் 1ஆவது உட்பிரிவு (a) யின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் 20,000 ரிங்கிட் தனி நபர் உத்தரவாத ஜாமினில் அந்த சந்தேகப் பேர்வழி விடுவிக்கப்பட்டார்.