
கோலாலம்பூர், பிப்ரவரி-27-Prepaid எனப்படும் முன்கட்டண முறையில் பணம் செலுத்தும் SIM அட்டைப் பதிவு விதிமுறைகளை மேலும் கடுமையாக்கும் வகையில், மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC புதிய கட்டாய தரநிலையை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய விதிகளின்படி, SIM அட்டை உரிமைக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதாவது மலேசிய குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள், ஒவ்வொரு சேவை வழங்குநரிடமும் அதிகபட்சம் 5 SIM அட்டைகளை மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுவர்.
அதேசமயம், குடியுரிமை அல்லாதோர் ஒவ்வொரு சேவை வழங்குநரிடமும் 2 SIM அட்டைகளை மட்டுமே பதிவுச் செய்ய முடியும்.
மிக முக்கியமாக, 12 வயதுக்குக் குறைவான குழந்தைகள் தங்களது பெயரில் SIM அட்டைகளைப் பதிவுச் செய்ய அனுமதி இல்லை.
அதுவே 12 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு, பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் சம்மதத்துடன், அவர்களின் விவரங்களை பதிவுச் செய்து மட்டுமே SIM பதிவு செய்ய வேண்டும்.
சேவை வழங்குநர்களும், பதிவு குறித்து 12 மணி நேரங்களில் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்; அதே சமயம் சுற்றுப்பயணிகளின் SIM அட்டைகள் அதிகபட்சம் 3 மாதங்கள் மட்டுமே செல்லுடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய நடவடிக்கைகள், மோசடி மற்றும் தவறான பயன்பாட்டை தடுக்கவும், தொலைத்தொடர்பு துறையில் பாதுகாப்பையும் பொறுப்புத்தன்மையையும் மேம்படுத்தவும் உதவும் என MCMC தெரிவித்துள்ளது.



