மலேசியா

“ஓடி ஒளியாதீர், தவறு செய்யவில்லை என்றால் நாடு திரும்புங்கள்” – சம்ரி வினோத், தமிம் டாஹ்ரிக்கு குலசேகரன் அறிவுரை

ஈப்போ, மார்ச்-15,

போலீஸால் தேடப்படும் சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மற்றும் சமூக ஆர்வலர் தமிம் டாஹ்ரி ஆகியோர் மலேசியாவுக்குத் திரும்ப வேண்டும் என, சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்களுக்கானபிரதமர் துறை துணையமைச்சர் எம். குலசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

“தவறு செய்யவில்லை என்றால், விசாரணையைச் சந்திக்க அவர்கள் பயப்பட வேண்டியதில்லை” என்றார் அவர்.

மற்றவர்களின் சமயத்தை இழிவுப்படுத்த யாருக்கும் உரிமையில்லை என சுட்டிக் காட்டிய குலசேகரன், சட்டத்தை மீறி யாருமில்லை என்பதையும் நினைவுப்படுத்தினார்.

போலீஸார், இருவரும் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

இதற்காக அந்நாட்டு அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு நடைபெறுகிறது.

இதற்கிடையில், தாம் தப்பிச் செல்லவில்லை என்றும், தேவைப்பட்டால் தேசியப் போலீஸ் படைத் தலைவரைச் சந்திக்கத் தயாராக உள்ளதாகவும், சம்ரி வினோத் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.

தப்பியோட வேண்டிய அவசியம் தமக்கில்லை எனவும் அவர் கூறிக் கொண்டார்.

இருவரும் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டதும், சம்ரி வினோத் மீது தனித்தனியாக 2 குற்றச்சாட்டுகளும், தமிம் மீது ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுமதியின்றி கட்டப்பட்ட கோயில்களுக்கு எதிராக கோலாலம்பூர் SOGO பேரங்காடிக்கு வெளியே போராட்டத்தை ஏற்பாடு செய்தது, பினாங்கில் டிக் டோக் நேரலையில் இந்தியர்களை இழிவுப்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளை சம்ரி வினோத் எதிர்கொள்வார்.

கெடா, லங்காவியில் திரிசூலத்தை காலால் மிதித்தாக தமிம் மீது குற்றம் சுமத்தப்படவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!