
ஜோகூர் பாரு, ஏப் 10 – கங்கார் பூலாய் வட்டாரத்தில் Taska எனப்படும் குழந்தை பராமரிப்பு நிலையத்தில் விடப்பட்ட 5 மாத குழந்தை நேற்று இறந்தாக தகவல் வெளியானது.
இச்சம்பவத்தை நேற்று மாலை மணி 4.24 அளவில் அந்த குழந்தையின் தாயாரான 31 வயதுடைய உள்நாட்டு பெண் ஒருவர் தெரிவித்ததாக Iskandar Puteri மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் M. குமரேசன் தெரிவித்தார்.
அந்த குழந்தையின் உடலில் மேற்கொள்ளப்பட்ட சவ பரிசோதனையில் அக்குழந்தையின் உடலில் எந்தவொரு காயத்திற்கான அடையாளமும் காணப்படவில்லை என அவர் கூறினார்.
தனது குழந்தையை பராமரிப்பு நிலையத்தின் 34 வயதுடைய பெண் ஊழியர் தூக்கத்திலிருந்து எழுப்பியபோது அக்குழந்தை மயக்கத்தில் இருந்ததாகவும் இதனைத் தொடர்ந்து சுல்தானா அமினா மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டுச் சென்றதாகவும் எனினும் குழந்தை இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதாக அக்குழந்தையின் தாயார் கூறியுள்ளார்.
அக்குழந்தையின் மரணத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதாக இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் குமரேசன் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை . இந்த விவகாரம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதோடு 2001ஆம் ஆண்டின் 31ஆவது பிரிவு (1) ( a) யின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.