பாக்கு, டிசம்பர்-30, அசர்பைஜான் விமானம் கசக்ஸ்தான் நாட்டில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், ரஷ்யா தனது தவற்றை ஒப்புக் கொள்ள வேண்டுமென அசர்பைஜான் அதிபர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அதற்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதோடு, Azerbaijan Airlines-க்கு ரஷ்யா இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் இல்ஹாம் அலியேவ் (Ilham Aliyev) வலியுறுத்தினார்.
விமானம் ரஷ்ய பிராந்தியத்தில் நுழைந்த போது ஏற்பட்ட ‘வெளிப்புற குறுக்கீடே’ விபத்துத்துக்குக் காரணமென்பதை ஆதாரங்கள் காட்டுகின்றன.
தரையிலிருந்து சுடப்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த விமானம், தரையிறங்கும் போது விழுந்து விபத்துக்குள்ளானதாக அலியேவ் சொன்னார்.
தம்மிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் நேற்று பட்டும் படாமல் மன்னிப்புக் கேட்டிருந்த நிலையில், அலியேவ் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அலியேவிடம் தொலைபேசியில் பேசிய போது, ரஷ்ய வான்வெளியில் நிகழ்ந்த அத்துயரத்திற்காக புட்டின் மன்னிப்புக் கேட்டார்.
ரஷ்யாவின் ச்செச்னியா (Chechnya) பிராந்தியத்தின் தலைநகரான குரோஸ்னியில் (Grozny) விமானம் தரையிறங்க முயன்ற போது, யுக்ரேனின் ட்ரோன் தாக்குதல்களை ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள் முறியடித்துக் கொண்டிருந்தன;
அப்போது தான் அவ்விபத்து நிகழ்ந்திருக்கிறது என புட்டின் சொன்னார்.
ஆனால், ரஷ்யாவின் தவறே அவ்விபத்துக்குக் காரணமென்பதை அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
67 பேரை ஏற்றியிருந்த அசர்பைஜான் விமானம், கிறிஸ்மஸ் தினத்தன்று காலை கசக்ஸ்தானின் அக்தாவ் விமான நிலையமருகே விழுந்து வெடித்துச் சிதறியது.
அதில் 38 பேர் உயிரிழந்த வேளை 29 பேர் காப்பாற்றப்பட்டனர்.