கோலாலம்பூர், செப்டம்பர் 6 – ம.இ.காவின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோ சிவராஜ் கடந்த ஆண்டு கட்சியை விட்டு விலகிய நிலையில், தற்போது மீண்டும் ம.இ.காவில் இணைந்துள்ளார்.
முன்னாள் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், சாதாரண உறுப்பினராக மீண்டும் ம.இ.கா கட்சியில் சேருவதற்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.
இவ்வேளையில், ம.இ.காவின் தேசிய தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கும், துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் உட்பட பிற உறுப்பினர்களுக்கும், மீண்டும் ம.இ.காவில் பணியாற்றும் வாய்ப்பை தனக்கு வழங்கியதற்காக அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
ம.இ.காவை வலுப்படுத்தக் கட்சியின் தலைமைத்துவத்துடன் இணைந்து செயல்படுவேன் என்றும் சிவராஜ் உறுதியளித்திருக்கிறார்.
இதனிடையே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாரிசான் நேஷனல் கூட்டணியிலிருந்து சிவராஜ் விலகினார்.
செனட்டராகவும் இந்தியச் சமூகத்தின் தலைவராகத் தனது பொறுப்புகளை எந்த இடையூறும் இல்லாமல், குறிப்பாக ம.இ.கா-விலிருந்து எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பொருப்பை நிறைவேற்ற வேண்டும் என அம்முடிவை அவர் எடுத்ததாக சிவராஜ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.